×

‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி ’ திட்டம் தொடக்கம் ஒவ்வொரு பள்ளியிலும் மாதம் 20 மரங்கள் நடப்படும்

*கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

நாகர்கோவில் : ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் சுற்றுச்சூழல் மாதம் கடைபிடிக்கப்படுகிறது. காற்றுமாசு, மியாவாக்கி காடுகள் வளர்த்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வன விலங்குகள் பாதுகாப்பு உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் தூய்மையை வலியுறுத்தும் வகையில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற நிகழ்வின் தொடக்க விழா நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்தது.

நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகன் வரவேற்றார். தொடக்க விழாவில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்து மரக்கன்று நட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பள்ளிகளில் குடிநீர், கழிவறை வசதிகளை முறையாக பராமரிக்க வேண்டும். பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்படுகிறது. அதனை பலப்படுத்த வேண்டும். அவற்றின் சார்பில் மாதம் தோறும் புதுப்புது நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும்.

இதற்காக 20 செயல்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை, திரவ கழிவு மேலாண்மை தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. பல்வேறு விதமான செயல்பாடுகள் செப்டம்பர் மாதம் முழுவதும் இன்று தொடங்கி உறுதிமொழி நிகழ்வுடன் நடத்தப்பட உள்ளது. இதற்காக பயிற்சி பணிமனைகளும் மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது.

திடக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், மீண்டும் எவ்வாறு பயன்படுத்துதல், அதற்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் தங்கள் வீடுகளிலும், சமூகத்திலும் இதனை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் அதில் தெரிவிக்கப்படும். பள்ளியில் உள்ள செடிகளை, மரங்களை அடையாளம் காணுதல், அவற்றின் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், ஒவ்வொரு பள்ளியிலும் மாதம் 20 மரங்கள் நடுதல் என்ற ஐந்து மாத திட்டம் செயல்படுத்தப்படும்.

மரங்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். மேலும் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளுதல், அதற்காக மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் மாணவர்களை அழைத்து சென்று குப்பைளை தரம் பிரித்து உரமாக மாற்றுதுல், கழிவு பொருட்களை எவ்வாறு மறு சுழற்சிக்கு உட்படுத்துதல், கழிவுநீரை மறு சுழற்சி செய்தல் போன்ற நிகழ்வுகள் மாணவர்களுக்கு காண்பிக்கப்படும்.

இவற்றில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்க பரிசுகள், சான்றிதழ் வழங்கப்படும். வரும் மாதங்களில் இது தொடர்ந்து நடத்தப்படும். சுகாதாரமான பசுமை திட்டத்தை சமூகத்தில் இதன் வாயிலாக உருவாக்க வேண்டும். பள்ளிகளை தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மாவட்ட சூழியல் ஒருங்கிணைப்பாளர் மலர்விழி உறுதிமொழி வாசித்தார். மாவட்ட வன அலுவலர் இளையராஜா, கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர் விழாவில் பலர் கலந்துகொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜமினா நன்றி கூறினார்.

அனைத்து துறைகள் ஒருங்கிணைப்பு

‘எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி’ திட்டத்தை ஊராட்சி மற்றும் உள்ளாட்சி துறை, வனத்துறை, மாநகராட்சி நிர்வாகம், வேளாண்மை துறை, மருத்துவ துறை, தோட்டக்கலைத்துறை, பேரூராட்சிகள் துறை போன்ற துறைகளின் ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழல் தொடர்பான தன்னார்வ நிறுவனங்களின் பங்களிப்புடனும், பள்ளிகளில் உள்ள மாணவர் அமைப்புகளான என்சிசி, என்எஸ்எஸ், ஜேஆர்சி சாரண சாரணியர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் மூலம் இணைந்து செயல்படுத்தப்படும்.

இயற்கை நட்சத்திரம் விருது

சிறப்பாக செயல்படும் பள்ளிகளை பாராட்டி மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கு ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ விருது, மாணவர்களுக்கு ‘இயற்கை நட்சத்திரம் விருது’, ஆசிரியர்களுக்கு ‘சிறந்த இயற்கை துணைவன் ஆசிரியர்’ விருது ஆகியன வழங்கப்படும். எஸ்.எல்.பி பள்ளியில் நடந்த விழாவில் மாணவ மாணவியருக்கு பலா, கொய்யா, புளி உள்ளிட்ட 20 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

The post ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி ’ திட்டம் தொடக்கம் ஒவ்வொரு பள்ளியிலும் மாதம் 20 மரங்கள் நடப்படும் appeared first on Dinakaran.

Tags : School ,Sridhar Information Nagercoil ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி